"பள்ளி மாணவர்களுக்காக புதிய முயற்சி".. சைபர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு - அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு
பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உதவியுடன் சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இருப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
சென்னை ஆழ்வார்பேட்டை ரஷ்யன் கலாச்சார மையத்தில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் மகேஸ்வரி , நடிகை சுகாசினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேடையில் பேசிய கூடுதல் ஆணையர் மகேஸ்வரி, பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் சைபர் குற்றங்களை தைரியமாக புகார் அளிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் குற்றங்களைத் தடுக்க முடியும் என்றும் கூறினார்."1930" என்ற எண்ணை தொடர்பு கொண்டு சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
கூடுதல் ஆணையர் மகேஸ்வரியைத் தொடர்ந்து பேசிய நடிகை சுஹாசினி, 6 ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய செல்போனுக்கே ஆபாச புகைப்படங்கள் அனுப்பப்பட்டன என்றும் தயங்கித் தயங்கி 3 மாதங்கள் கழித்து போலீசில் புகாரளித்தாகவும் கூறினார். அன்றைய தேதியில் 55 வயதாக இருந்த தனக்கே அதுபோன்ற புகைப்படங்களால் மன உளைச்சல் ஏற்பட்டபோது, 18, 19 வயதில் இருக்கும் இளம்பெண்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பினார்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், சைபர் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.
Comments